Baahubali Review in Tamil : Vikatan Magazine.

Review of Baahubali by the most famous and respected Tamil Weekly 'Vikatan'

பாகுபலி படம் எப்படி? 
நாம் பார்த்து ரசித்த மன்னர்கதைகளின் புதியவடிவமாய் வந்திருக்கிறது பாகுபலி. இதற்குமுன் பார்த்த படங்களை விடப் பிரமாண்டமாகவே இருக்கிறது என்பதுதான் இதன்பலம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் சகோதர யுத்தத்தின் காரணமாக அரண்மனையை விட்டு காட்டுக்குள் வந்துவிட்ட பிரபாஸ் மீண்டும் அரண்மனைக்குச் சென்றவுடன் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைத்தான் நெஞ்சம் அதிரச் சொல்லியிருக்கிறார்கள்.


தொடக்கத்திலேயே மிகப்பெரிய அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் காட்சியிலேயே படத்துக்குள் நம்மை இழுத்துவிடுகிறார்கள். ரம்யாவின் மறைவும் அந்த நேரத்திலும் அந்தக்குழந்தையைக் காப்பாற்றிவதோடு அது எங்கிருந்து வந்தது? என்பதை விரலசைவிலேயே சுட்டிக்காட்டி மரணிப்பதும் படத்தின் போக்கை நமக்குச் சொல்லிவிடுகிறது. 

ஆதிவாசிகள் கூட்டத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகன் பிரபாஸ், மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதைச் சுட்டுகிற மாதிரியே காட்சிகள் இருக்கின்றன. அவர் எங்கிருந்து விழுந்தாலும் அவர் உடம்பில் ஒரு கீறலும் விழாது என்பது உட்பட மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பினும், பிரபாஸின் உடற்கட்டும், அலட்சியப்புன்னகையுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் விதமும் அந்தக்காட்சிகளுக்கு நியாயம் செய்கிற மாதிரி இருக்கின்றன. 

சிவலிங்கத்தை அவர் தூக்கிக்கொண்டு போய் அருவியில் வைக்கும் காட்சி சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வளவு பெரிய மலையருவியை பிரபாஸ் ஏறிக்கடக்க முயன்று தோற்பதும், அதன்பின்னர் தமன்னா திரையில் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து மலையருவியைக் கடக்கும் காட்சிகள், கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம் என்கிற பாரதிதாசனின் வரிகளின் காட்சி வடிவமாக அமைந்திருக்கின்றன. 

துரோகத்தால் வீழ்த்தப்பட்டதோடு திறந்தவெளிச்சிறையில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கைதியாக இருக்கும் மன்னரின் மனைவியை மீட்கும் போராளிக்கூட்டத்தில் ஒரு போராளியாய் நடித்திருக்கும் தமன்னாவுக்கு இந்தப்படம் நற்பெயரைத் தரும். போராளியாகத் துடிப்புடன் செய்லபடுவதோடு பிரபாஸோடு காதலில் கசிந்துருகும் காட்சிகளில் ரசிகர்களைக் கவருவார் என்பது நிச்சயம். 

ஓரிருகாட்சிகள்தாம் என்றாலும் பிரபாஸ், தமன்னா காதலில் இளமைப்போதை நிறைந்திருக்கிறது. ஓரிரு காட்சிகளில் வயதான கைதியாக அனுஷ்காவைக் காட்டிப் பெரும்பாவம் செய்துவிட்டார் ராஜமௌலி. (அடுத்த பாகத்தில் அதற்குப் பிராயச்சித்தம் செய்துவிடுவார் என்று நம்பலாம்)காயங்களும் தழும்புகளும் கொண்ட ஒப்பனையோடு, என் மகன் வருவான் என்று மிகநம்பிக்கையாகச் சொல்லும் அனுஷ்காவும் வரவேற்புப் பெறுகிறார். 

பல்லாளதேவராக நடித்திருக்கும் ராணாவின் அறிமுகக்காட்சி, ஜோதாஅக்பரில் யானையோடு மோதும் ஹிருத்திக்ரோஷனை நினைவு படுத்தினாலும் அதைவிடச் சிறப்பாகக் காட்டெருமையோடு மோதுகிறார் ராணா. அவருடைய நூறடி உயரச்சிலையை நிர்மாணிக்கும் காட்சியும் அதற்குள் பிரபாஸ் வருவதும் சிலிர்ப்பு. 

ராஜவிசுவாசியாக வருகிற சத்யராஜ், நன்றாக நடித்திருக்கிறார், பாகுபலீலீலீ என்று வேகமாகப் போய் மண்டியிடும் காட்சியிலும் இறுதியில் வருகிற போர்க்காட்சியிலும் சபாஷ் சொல்லவைக்கிறார் சத்யராஜ். ராணாவின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர், எள்ளல் சிரிப்பிலும் கடுப்புப் பார்வையிலுமே நடித்து தன் இருப்பைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார். 

அரசியாக வருகிற ரம்யாகிருஷ்ணனுக்கு படையப்பாவுக்குப் பிறகு அமைந்திருக்கும் கம்பீரமான வேடம். முகத்திலேயே கம்பீரத்தைக் காட்டுவதோடு வீரர்களை எதிர்கொண்டு கொல்லும் காட்சிகளிலும் ரசிக்கவைத்திருக்கிறார். 

இடைவேளைக்குப் பிறகு வருகிற போர்க்காட்சிகள், இதுவரை வந்த போர்க் காட்சிகளின் உச்சம் என்று சொல்லுமளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மேலிருக்கும் பெரிய விசிறி போல தேரின் முன்னால் கத்திகளை விசிறிபோல் சுற்றவிட்டுக்கொண்டு ராணா வரும்போது நாசரோடு சேர்ந்து ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒற்றைக்குதிரையில் பிரபாஸின் சாகசங்களும் வியக்கவைக்கின்றன. 

அப்பாவி மக்களைக் கேடயமாக எதிரிப்படைகள் பயன்படுத்துகிற நேரத்தில் பிரபாஸ் எடுக்கும் முடிவு உண்மையான வீரர்களுக்கான இலக்கணம். போர்க்காட்சிகள் பனைமரங்களுக்கு இடையே நடப்பது போல் காட்டியிருப்பது படத்தை தமிழுக்கு நெருக்கமாக்கிக் காட்டுகிறது. 

சாகறதுக்குள்ள அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று நீயும், இன்னொருமுறை அவனைக் கொல்லவேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறோம், இரண்டுமே நிறைவேறாத ஆசைகள் என்று ராணா பேசுவது உட்பட கார்க்கியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. 

கீரவாணியின் இசையில் உருவான பாடல்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் வேகத்துக்குத் தடைபோடுகின்றன. பின்னணிஇசையில் அவர் திரைக்கதைக்கு இணையாகப் பயணித்திருக்கிறார் என்று சொல்லலாம். 

ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் உழைப்பும் சிறப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மலையருவி, மகிழ்மதி அரண்மனை, போர்க்களம் ஆகிய எல்லா இடங்களிலும் அவருடைய பங்கு மிகப்பெரிது. 

ஒவ்வொரு காட்சியிலும் கடும் உழைப்பு தெரிவதும், காதல், வீரம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளைக் காட்சியழகோடு சேர்த்துக்கொடுத்திருப்பதும் இயக்குநர் ராஜமௌலியின் பலம். மையக்கதை புதிதல்ல என்றாலும் காட்சிகள் வடிவமைப்பில் ரசிகர்களுக்குப் புதியஅனுபவங்களைக் கொடுத்திருக்கும் ராஜமௌலியைப் பாராட்டலாம். 

கடைசியில் சத்யராஜ் பேசும் வசனத்தின் மூலம், இவ்வளவு பெரியபடத்தை இது முன்னோட்டம்தான் கதை இனிமேல்தான் இருக்கு என்பது போலச் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அது ராஜமௌலி குழுவினருக்கு இருக்கிறது.

Post a Comment

0 Comments